ஸ்பெயினில் முழு கிராமம் ஒன்று குறைந்த விலையில் விற்பனையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் ஜமோரா மாகாணத்தில் போர்த்துகல் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த 'சால்டோ டி காஸ்ட்ரோ' எனும் சிறிய கிராமத்தின் விலை வெறும் ரூ.2.16 கோடிதான்.

1950களில் இந்த பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இப்போது இருப்பதை போன்ற தொழில்நுட்பம் அப்போது கிடையாது.

எனவே இதனை கட்டி முடிக்க பல ஆண்டுகள் ஆகும். இக்காலகட்டங்களில் இங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்கு இடம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அப்படி உருவானதுதான் இந்த 'சால்டோ டி காஸ்ட்ரோ' எனும் சிறிய கிராமம்.

இதனை Iberdrola எனும் நிறுவனம் உருவாக்கியது.

இதில் 44 வீடுகள், ஒரு ஓட்டல், ஒரு நீச்சல் குளம், காவலர்கள் தங்குவதற்கான இடம், ஒரு தேவாலயம் மற்றும் ஒரு பள்ளியும் தற்போது மிச்சம் இருக்கிறது.

1950களில் தொடங்கி 1980 வரை மக்கள் இங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் இங்கு யாரும் வசிக்கவில்லை. பின்னர் அவ்வப்போது யாராவது வந்து போவதுண்டு.

இதனையடுத்து இந்த இடத்தை Iberdrola நிறுவனம் விற்றுவிட்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு இதனை வாங்கியவர் இப்பகுதியை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்ற விரும்பினார். ஆனால் அதற்காக அவர் 2 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக செலவிட வேண்டி இருந்தது.

இதனால் இத்திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கு யாரும் வரவில்லை. மக்களால் கைவிடப்பட்டு இயற்கையின் ஆக்கிரமிப்பில் இந்த இடம் வசமானது.

இதனையடுத்து Idealista நிறுவனம் மூலம் தற்போது இந்த இடம் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இது குறித்து கிராமத்தின் உரிமையாளர் கூறுகையில், 'நான் நகர்ப்புறத்தில் இருப்பதால் இந்த கிராமத்தை என்னால் பராமரிக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார். இந்த கிராமத்தை வாங்க தற்போது வரை 300 பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக Idealista நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் ஒருவர் முன் பணம் கூட கொடுத்துள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக இதைவிட அதிக தொகையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்றும், ஆனால் யாரும் வாங்க முன்வராததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இங்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும் எனவேதான் யாரும் இந்த கிராமத்தை வாங்க முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த கிராமத்தை மறு கட்டமைப்பு செய்ய அதிக அளவு பணம் செலவாகும் என்பதால்தான் யாரும் வங்க முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.