ட்விட்டரை தன் வசப்படுத்திய முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ கணக்கான ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் அக்கவுண்ட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கூறிய பிறகு தான் போலி கணக்குகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன‌

அந்தவகையில், சமீபத்தில் ட்விட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் பெயரிலேயே போலி கணக்கு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றொரு ட்விட்டர் கணக்கு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 9ம் திகதி இயேசு கிறிஸ்து என்ற பெயரில் உள்ள கணக்குக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள் உலகத்தை மீட்க வந்த இரட்சகர் இயேசு நாதர் ப்ளூ டிக் பெற்றுள்ளார் என, சமூக வலைதளங்களில் மரண கலாய் செய்து வருகின்றனர்.

அந்த டிவிட்டர் கணக்கின் ப்ரொஃபைலில், பெயர் Jesus Christ என்றும், அசல் பெயர் @jesus என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெயருக்கு அருகில், ‘தச்சர், குணம் அளிப்பவர், கடவுள்’ என, இயேசுவின் பண்புகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் இருப்பதாக இணைய வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்துவுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டதை அடுத்து பலரும், ‘போலி’ கணக்கு என்று கூறி வருகின்றனர்.

அதற்கு இயேசு கிறிஸ்து, ‘நான் போலியானவன் என்கின்ற சந்தேகம் எதற்கு?’ என, கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது