ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 1970கள் மற்றும் 80களில் அணிந்ததாகக் கூறப்படும் பிர்கென்ஸ்டாக் செருப்பு தற்போது ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு ஏலத்திற்கு வந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் பல முக்கியமான தருணங்களில் இந்தச் செருப்பைத் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்தார் என்று கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செருப்புகளுக்கு 60,000 முதல் 80,000 டாலர் வரையிலான விலைக்கு ஏலம் போகும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை 22,500 டாலருக்கு மட்டுமே ஏலம் கோரப்பட்டுள்ளது.

இது கணிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மிகவும் குறைவு என்பதால் ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் நல்ல விலை வரும் வரையில் காத்திருக்க முடிவு செய்துள்ளது.

1980 களில் கலிபோர்னியாவில் ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்துக்களை நிர்வகித்த மார்க் ஷெஃப் என்பவரிடம் இந்தப் பிரவுன் கலரில் மெல்லிய தோல் செருப்புகள் முன்பு இருந்தன. தற்போது பல கைகள் மாறி ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் ஏலம் விடுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் தான் பயன்படுத்திய செருப்பைக் குப்பையில் போடும் போது இந்தச் செருப்பைக் காப்பாற்றியதாக மார்க் ஷெஃப் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள பல கண்காட்சிகளில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்தச் செருப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள வரலாற்று அருங்காட்சியகம் வூர்ட்டம்பேர்க்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரவுன் நிற செப்பில் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் கால் பதிவு இன்னும் உள்ளது.

Birkenstocks செருப்புகளைத் தினசரி பயன்பாட்டுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பினார் என அவரது முன்னாள் கூட்டாளர் கிறிசன் பிரென்னன் 2018 இல் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.