பல இந்திய அரசாங்க அமைப்புகளின் டுவிட்டர் பக்கங்களில் 'அதிகாரப்பூர்வ முத்திரை' ஒன்று காணப்பட்டது.

உதாரணமாக, பிரதமர் மோடி அலுவலகம், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ட்விட்டர் கணக்கு ஆகியவற்றிலும் அதிகாரப்பூர்வ முத்திரை‌ காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து எலன் மஸ்க் ஒரு ட்வீட் மூலம் அனைத்தையும் தெளிவுபடுத்தினார்.

அவர் கூறியதாவது..

"வரவிருக்கும் மாதங்களில் ட்விட்டர் பல வேடிக்கையான விஷயங்களைச் செய்யும். நாங்கள் நிறைய சோதனைகளைச் செய்வோம். அதன்மூலம், எது சரியாக செயல்படுகிறதோ அதை வைத்துவிட்டு பலனளிக்காததை மாற்றுவோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அவர் "புகார் ஹாட்லைன் ஆபரேட்டர் ஆன்லைனில் இருக்கிறார்! உங்கள் புகார்களை கீழே குறிப்பிடவும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் நிர்வாகி எஸ்தர் க்ராபோர்ட் கூறியதாவது..

"'ட்விட்டர் புளூ' சந்தாதாரர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்குகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்று பலர் கேட்டுள்ளனர். இதனால்தான் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட 'புளூ டிக் அடையாளத்திற்கு பதிலாக‌ சில கணக்குகளுக்கு 'அதிகாரப்பூர்வ முத்திரை' ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம்.

அரசு கணக்குகள், வணிக நிறுவனங்கள், வணிக கூட்டாளர்கள், முக்கிய ஊடகங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் சில பொது நபர்கள் ஆகியவற்றுக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை குறிப்பிடப்படும்" என்று அவர் கூறினார்.