எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் 27வது காலநிலை மாற்ற மாநாடு (Cop27) நடைபெற்று வருகிறது.

இதில் 100க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்த ஐநா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடக்கத்தில் தவறான உரையை வாசித்ததால் கூட்ட அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.

இதில் சிறப்புரையாற்றிய அன்டோனியோ குட்டெரெஸ்...

 'காலநிலை மாற்றம் என்பது நம்மை தீவிரமாக பாதித்துள்ளது. சரியாக சொல்வதெனில் ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்துக்கொண்டு காலநிலை மாற்றத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் நாம் அமர்ந்திருக்கிறோம். இதற்கெதிரான போராட்டத்தில் நாம் வெற்றியடையவில்லை என்றால் இந்த பூமியை இழந்துவிடுவோம் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், 'இந்த 15 நாட்கள் முடிவில் நாம் ஒன்று காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்க ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில், தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி இருக்கும். முதலில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனைத்து வசதிகளும் நம்மிடமே இருக்கின்றன. இந்த வாய்ப்பின் வாசல் திறந்திருக்கிறது.

ஆனால் அது குறைவான அளவே திறந்திருக்கிறது. எனவே நாம் உடனடியாக அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வரும் 10 ஆண்டுகளுக்குள் நாம் இப்போரில் வெற்றியடைய வேண்டும். பூமியை இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டும்.' என்று கூறினார்.

ஆனால் இதற்கு முன்னதாக அவர் உரையாற்ற தொடங்கும் போது நடந்த சம்பவம் கூட்ட அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அதாவது, அவர் தனது உரையை மாற்றி படித்துவிட்டார். அதில், 'உலகம் இந்த பந்தயத்தில் தன்னை மெதுவாக இழந்து வருகிறது. ஆனால் உங்களால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனெனில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களை நீங்கள் கணக்குப்போட்டு வைத்திருக்கிறீர்கள்' என்று வாசித்துவிட்டு சிறிது நேரம் குழம்பி நின்றார்.

பின்னர் 'தவறான உரை கொடுக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்' என சிரித்துக்கொண்டே முணுமுணுத்தார்.

சில விநாடிகளில் அவரது பணியாளர்கள் அவருக்கு சரியான உரையை கொடுத்தனர். பின்னர் இந்த புதிய உரையை தொடங்குவதற்கு முன்னதாக, சிரித்துக்கொண்டே அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இதனால் கூட்ட அரங்கில் சிரிப்பலை உருவானது.