எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர்.

இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளூ சேவை, வரும் நாட்களில் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும், இது துல்லியமாக இருந்தால், முதலில் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ட்விட்டரில் புளூ டிக் சேவையை தற்போது பணம் கொடுத்து பெறும் வசதி உள்ளதால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று பலர் கண்டித்துள்ளனர்.

எனினும், யாராவது ட்விட்டர் இதனை தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.