Rotorua வில் உள்ள ஒரு வங்கியில் மக்களைப் பணயக் கைதிகளாகக் கடத்தி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக Amohau தெருவில் உள்ள BNZ வங்கியில் நபர் ஒருவர் நுழைந்து மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபர் கைகளை உயர்த்தியபடி வெளியே வந்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

பணயக்கைதிகள் மாலை 4.50 மணியளவில் எவ்வித பாதிப்பும் இன்றி வங்கியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று ரோட்டோருவா மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் நீதிபதி முன் ஆஜரானார்.

அவர் மீது மிரட்டல் மற்றும் ஏழு கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் அவருடைய பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்த மாதம் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே BNZ வங்கி இன்று வங்கி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.