Manukau துறைமுகத்தில் படகு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நடவடிக்கைகள் பெரும்பாலும் வான்வழி அடிப்படையிலானதாக இருக்கும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Manukau துறைமுகத்தில் உள்ள Clarks கடற்கரையில் ஐந்து பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர்  மீட்கப்பட்டார். இருவர் கரைக்கு நீந்தி வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில் ஒருவர் காணாமல் போனதை அடுத்து அவரை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திங்கட்கிழமை Waiuku வின் Sandspit Rd பள்ளி முதல்வர் Sharyn de Jonge, காணாமல் போனவர் அவர்களின் பள்ளி மாணவர்களில் ஒருவர் என்பதை உறுதிப்படுத்தினார்.

அவர் 10 வயதுடைய சிறுவன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமூகத்தில் உள்ள பலர் கடற்கரையோரம் தேடுதலுக்கு உதவுகிறார்கள்.

தங்கள் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் தன்னார்வலர்களுக்கு காவல் துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்குவோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.