இந்தாண்டு எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது.

இதில் 198 நாடுகளைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலகம் நரகத்தை நோக்கி ஹைவே-இல் விரைவாக சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

விரைவில் இதை தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிப்புகள் மாற்ற முடியாதவையாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

இந்த கூட்டத்தில் குட்டரெஸ் மேலும் பேசுகையில்..

'நாம் பருவநிலை மாற்றத்தின் நரகத்தை நோக்கில் ஹைவே-இல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிப்புகளை மாற்ற முடியாமலே போகிவிடும். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை இப்போதே நம்மால் பார்க்க முடியும். இனியும் அவை ஏற்படுத்தும் இழப்பு மற்றும் சேதத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

பருவநிலை மாற்றத்தை தடுக்க தெளிவான நடவடிக்கைகள் தேவை. எந்த காலகட்டத்திற்குள் எந்தெந்த நடவடிக்கைகளை எடுத்து முடித்தாக வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நாடுகளுமே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. எனவே பணக்கார நாடுகளும் ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். 2030இல் முடியவில்லை என்றால் 2040க்குள் நிச்சயம் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட வேண்டும். கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியிடும் அமெரிக்கா மற்றும் சீனா பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பருவநிலை மாற்றத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

மனிதகுலத்தின் கண் முன்னே இப்போது ஒரு தேர்வு தான் உள்ளது. ஒன்று இதற்கு ஒத்துழைத்து பருவநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இதிலேயே சிக்கி அழிந்துவிட வேண்டும். இது பருவநிலை மாற்றத்திற்கான ஒற்றுமை ஒப்பந்தமாக இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நாம் அழிய போவது உறுதி' என்று அவர் தெரிவித்தார்.