ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற தீா்மானத்தில் (UNFCCC) இணைந்துள்ள உலக நாடுகள் பங்கேற்கும் 27 ஆவது COP மாநாடு எகிப்தின் ஷா்ம் அல்-ஷேக் நகரில் ஞாயிற்றுக்கிழமை (06) தொடங்கியது.

இந்த மாநாடு எதிர்வரும் 18‌ ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதுவரை மொத்தம் 26 COP மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

COP முதல் மாநாடு 1995-ம் ஆண்டு நடைபெற்றது.

தற்போது நடைபெறும் 27வது மாநாடு சுருக்கமாக COP27 என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த COP27 மாநாட்டில் 5 முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

இதன்படி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, காலநிலை மாற்ற திட்டங்களுக்கான நிதி ஆதாரம், காலநிலை மாற்றத்தை குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்துதல் ஆகிய 5 முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.

இதனிடையே கொவிட் தொற்று பரவல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையேயான போா்ச் சூழலால் சா்வதேச பொருளாதாரம் மீண்டும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட வளா்ச்சியடைந்த நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை எதிா்கொண்டுள்ள நிலையில் அவை வளா்ந்து வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நிதியை வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மாநாட்டில் அதற்கான விடை கிடைக்கும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும் கடந்த மாநாட்டைப் போல் எடுக்கப்பட்ட முடிவுகளை அலட்சியப் போக்குடன் அணுகாமல் கண்டிப்பான முறையில் அமல்படுத்தினால்தான் இந்த பேரிடர் சிக்கலில் இருந்து எதிர்கால தலைமுறையை காப்பாற்ற முடியும் என்பதே காலநிலை மாற்றத்தைத் தடுக்கக் கோரும் சூழலியலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.