தான் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ட்விட்டர் பணியாளரான இந்தியர் ஒருவர் மகிழ்ச்சியாக பதிவிட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று முதல் ட்விட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.

அவர் கடந்த வாரம் ட்விட்டரின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், சிஇஓ பரக் அகர்வால் முதல் தலைமையில் இருந்து பலரையும் பணிநீக்கம் செய்தார்.

மேலும் ட்விட்டர் இந்தியாவில், மார்க்கெட்டிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை பணியாளர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பலருக்கும் இரண்டு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள், தங்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். #OneTeam என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பலரும் பதிவிட்டு வந்தனர்.

இதில், ஒருவர் தனது வேலையிழப்பு செய்தியை மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

யாஷ் அகர்வால் என்பவர் அவரது ட்வீட்டில்,"இப்போதுதான் வேலை பறிபோனது. ட்விட்டருடன் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரியது. அணியாக, இந்த கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என குறிப்பிட்டு, அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்தில், ட்விட்டர் சின்னம் பொறிக்கப்பட்ட 2 சிறு தலையணையை அவர் கையில் வைத்துள்ளது தெரிகிறது. மேலும், அந்த புகைப்படம் ட்விட்டர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இந்த பதிவை இட்ட யாஷ் தயால், ட்விட்டரில் பொது கொள்கை குழுவில் பணியாற்றியதாக தெரிகிறது. 

25 வயதான யாஷ், தனது வேலை பறிபோன விஷயத்தையும் நேர்மறையாக அணுகிய விதம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. பலரும் திடீர் ஆட்குறைப்பை எதிர்த்தும், தங்களின் வருத்ததை தெரிவித்தும் வந்த நிலையில், யாஷ் அகர்வாலின் இந்த செயல் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பதை வெளிக்காட்டுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.