1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நெதன்யாகு பிரதமரானார்.

ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் நெதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.

இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன.

இதனால் அந்த நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்

இதனிடையே, அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது.

இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும்.

இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 120 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 86 சதவிகித வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுள்ளன. அவற்றில், 65 தொகுதிகளில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

எஞ்சிய வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால் இஸ்ரேலின் புதிய பிரதமராக நெதன்யாகு மீண்டும் தேர்தெடுக்கப்பட உள்ளதால் அவரது கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.