பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் இந்திய மாணவர்களுக்கு வேலை கொடுப்பது போல கொடுத்துவிட்டு, தற்போது அனைவரையும் வேலையில் இருந்து நீக்குவதாக கனடா அரசு மீது குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியர்களை கெளரவமாக நடத்தும், அவர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் ஒருசில நாடுகளில் கனடாவும் ஒன்று என்ற பிம்பம் உருவாகியிருக்கும் நிலையில், இந்திய மாணவர்களின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு ஆகிய நாடுகளை தொடர்ந்து கனடாவில் தான் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

கனடா மக்கள்தொகையில் 5 சதவீதத்துக்கும் மேல் இந்தியர்கள் இருக்கின்றனர்.

கனடாவை பொறுத்தவரை, பல ஆண்டுகாலமாகவே அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் இந்தியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனோ ஊரடங்கால் கனடாவின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தை அடுத்து 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததும் அங்கிருந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஆனால், அங்கு பணிபுரிவதற்கு தேவையான ஊழியர்கள் அவர்களுக்கு உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் கனடா அரசு அவசரமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது, கனடாவில் பட்டப்படிப்பு முடித்த வெளிநாட்டு மாணவர்கள் விசாக் காலம் முடிவடைந்தாலும் 18 மாதங்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 18 மாதக்கால பணி விசா நிறைவடைந்த பிறகும், அவர்கள் கனடாவில் தங்கி வேலை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த அறிவிப்பு அந்த சமயத்தில் இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பல நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் வேலை வாயப்பை பெற்றனர்.

இந்த சூழலில், 18 மாதக்கால பணி விசா முடிவடைந்ததும் பல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், அவர்கள் கனடாவில் தங்கவும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'கொரனோவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள அவர்களுக்கு நாங்கள் தேவைப்பட்டோம். தேவை முடியும் வரை எங்கள் உழைப்பை அவர்கள் சுரண்டினர். மிக சொற்ப ஊதியம் கொடுத்து எங்களை வேலை வாங்கினர். தற்போது அவர்களின் தேவை முடிந்ததும் எங்களை தூக்கி எறிந்துவிட்டார்கள். இப்போது எங்கள் பணியிடத்துக்கு கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை பணியமர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கனடா அரசின் இந்த முடிவால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம்' என்றனர்.