தற்போதைய நவீன செல்போன் காலத்தில் உணவில்லாமல் கூட இருந்து விடுவார்களோ என்னவோ சமூக வலைதளங்களில் உலாவாமல் பலரால் இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு வாழ்வில் அங்கமாகவே மாறிப் போய் உள்ளன சமூக வலைதளங்கள்.

ஆரம்பத்தில் பேஸ்புக் மட்டுமே பிரபல வலைதளமாக இருந்த நிலையில் அதன் பிறகு ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என பல தளங்கள் பல்கி பெருகின.

இந்நிலையில் நேற்றைய தினம் தீடீரென இன்ஸ்டாகிராம் பல மணிநேரமாக முடங்கிய நிலையில் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலருக்கும் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது என செய்தி வந்துள்ளது.

இதனால் என்ன காரணம் என்று தெரியாமல் பயனாளர்கள் குழம்பிய நிலையில், எங்களை சமூக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் அக்கவுண்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகளவில் ஏறத்தாழ 8 மணிநேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதன் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் அந்நிறுவனம், “உங்களில் சிலருக்கு  இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம். உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது. சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம். அதை சரிசெய்துவிட்டோம்’ என்று  தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பும் உலக அளவில் முடங்கியது குறிப்பிடத்தக்கது.