இருபதுக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற 12 ஆம் திகதி இரவு ரித்திகல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஐநூறுக்கும் மேற்பட்ட யானை வெடிகளை வெடிக்கவைத்து வெற்றியை கொண்டாடியதாக தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த வனஜீவராசிகள் காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள் அன்று இரவை மது அருந்தி மாமிசம் புசித்து யானை வெடி வெடித்து கொண்டாடியமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.

ரித்திகல வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பொதுமக்களுக்கு யானை வெடிகளை விநியோகித்தமைக்கான ஆவணங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

இருபதுக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற அன்று இரவு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளுக்கு மதுபானம் வழங்கி மகிழ்வித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானைகளினால் அடிக்கடி தாக்கப்படும் கெக்கிராவ, கலென்பிந்துனுவெவ, ஹொரோவ்பதான, ரித்திகல போன்ற பிரதேசங்களில் யானைக வெடிகளை கோரும் போது வனவிலங்கு அதிகாரிகள் பட்டாசுகளை கொளுத்துமாறு மக்களிடம் கூறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

காட்டு யானைகளின் தாக்குதலால் நாளுக்கு நாள் மனித உயிரிழப்புகள் பதிவாகி வரும் நிலையில், மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள யானை வெடிகளை எரித்தமை தொடர்பில் பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானை வெடிகளுக்கு கோடிக்கணக்கான பொதுப் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான பின்னணியில் பொதுமக்களின் பணத்தை அழித்த ரித்திகல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும் பொறுப்பான அமைச்சுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானைகளால் தாக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், இழப்பீடு வழங்காததற்கு அதிகாரிகள் அடிக்கடி காரணம் கூறுவதாகவும் எந்தவொரு பொறுப்பான நபரும் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.