தொட்டலங்கா, காஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தீயினால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (27) ஏற்பட்ட தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்குப் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை இன்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.