நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நன்முறையில் முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் ஓய்வு தேவை என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ கமல்ஹாசனின் வலது காலில் ஏற்பட்ட சிறு தொற்று காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த நிலையில், அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதையொட்டி, நீங்கள் கொடுத்த ஆதரவு, பிரார்த்தனை மற்றும் உண்மையான அக்கறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்தது என்பதை மகிழ்ச்யுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வீடு திரும்புவார். அதன் பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுப்பார். அதன் பின்னர் வழக்கம்போல் மக்களுடன் உரையாடுவார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.