டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய முகக்கவசம் மற்றும் டீசர்ட் அணிந்தபடி, ஆஸ்திரேலியா மெல்போர்னில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பெண் ஸ்கைடைவ் செய்தார்.

இதன்படி ,மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பல்ஜித் கவுர் 15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கைடைவ் செய்துள்ளார். இந்த ஸ்கைடைவிற்காக அவர் இந்திய பணத்தில் 35 ஆயிரம் செலவு செய்துள்ளார், 29 வயதான இவர் தனது முகக்கவசம் மற்றும் டிசர்ட்டில் விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்களை பொறித்தபடி டைவ் செய்தார்.

மேலும் ,தங்கள் குடும்பம் விவசாயக்குடும்பம் இல்லை என்றாலும், டெல்லி குளிரில் போராடும் வயதான ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இந்த ஆதரவில் ஈடுபட்டதாக பல்ஜித் தெரிவித்தார்.

இது பற்றி பேசிய அவர் “ கடந்த மூன்று மாதங்களாகவே அவர்கள் இந்த சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதையும், ஒரு மாதமாக டெல்லி எல்லையில் கடுங்குளிரில் போராடும் வீடியோக்களையும் பார்த்துவிட்டுத்தான் என்னால் இயன்ற இந்த எதிர்ப்பினை பதிவு செய்ய முடிவு செய்தேன்” என கூறினார்.