ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி டோங்காவில் இணைய சேவையை மீட்டெடுக்க எலோன் மஸ்க் முயற்சி செய்து வருகிறார்.

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை ஜனவரி 15 ஆம் திகதி திடீரென வெடித்து சிதறியது.

கடலுக்கு அடியில் இருந்த குறித்த எரிமலை வெடித்ததால், கடலில் சுனாமி அலை உருவானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி தீவு நாட்டை புரட்டி போட்டது.

இந்நிலையில் டோங்காவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே ஃபைபர்-ஆப்டிக் கேபிளை சுனாமி துண்டித்ததால், அங்கு மக்கள் இணைய வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டோங்கோ தீவுக்கு  மீண்டும் இணைய வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலோன் மஸ்க், தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ன்  ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி டோங்காவில் இணைய வசதியை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார்.

டோங்காவின் அண்டை நாடான பிஜியின் உயர் அதிகாரி ஒருவர் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் குழுவினர் பிஜியில் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்கள் மூலம் டோங்காவை மீண்டும் இணைக்க உதவும் நிலையத்தை நிறுவி வருவதாக ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் எலோன் மஸ்க், டோங்கோ தீவுவாசிகளுக்கு மீண்டும் இண்டர்நெட்டை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.