அமெரிக்க இராணுவத்தினர் யாரேனும் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் அவர்களை வேலையிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க இராணுவ அமைச்சர் கிறிஸ்டின் உர்முத் கூறுகையில், அமெரிக்க படையினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும். யாரேனும் ஊசி போட மறுத்தால் அவர்களால் படையினருக்கு ஆபத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அது படையினரின் ஆயத்த நிலையை கேள்விக்குறியாக்கும். எனவே ஊசி போட்டுக் கொள்ள முன்வராதோர் பணியிலிருந்து நீக்கப்படுவர்.

ஊசி போட முன்வராத வீரர்கள் முதல் கட்டமாக தனித்து பட்டியல் எடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர்.

அவர்களுக்கு சம்பளம் இரத்து செய்யப்படும். மேலும் அவர்களுக்கான இன்சென்டிவ், போனஸ், சிறப்பு ஊதியம் என எந்தச் சலுகையும் கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அனைத்துப் பாதுகாப்புப் படையினருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான படையினர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இருப்பினும் கணிசமான வீரர்கள் தடுப்பூசி போடாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தடுப்பூசி போட மறுத்த 6 அதிகாரிகள், 2 பட்டாலியன் கமாண்டர்கள், 3073 படையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.