இளவரசர் சார்லஸ் மனைவி கமிலா, ராணி என அழைக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், 2 ஆம் எலிசபெத் மகாராணி (வயது 95).

இவர் 1952 ஆம் பெப்ரவரி  6 ஆம் திகதி இங்கிலாந்து ராணியாக அரியாசனம் ஏறினார்.

இந்நிலையில் இவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.

எலிசபெத் மகாராணி தான் பட்டத்துக்கு வந்து 70 ஆண்டு
நிறைவை ஒட்டி சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் நேற்று தனிப்பட்ட முறையில் கொண்டாடினார்.

இந்நிலையில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார்.

அந்த செய்தியில் அவர், ‘‘உங்கள் அனைவரின் ஆதரவுக்காகவும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்மீது தொடர்ந்து காட்டி வரும் விசுவாசத்துக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன் உள்ளவளாக இருப்பேன்’’ என கூறி உள்ளார்.

மேலும் தான் பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகியுள்ள இந்த தருணத்தில் எதிர்காலத்தில் ராணி பட்டம் யாருக்கு என்பதை அவர் கைகாட்டி உள்ளார்.

“சார்லஸ் மன்னர் ஆகிறபோது, ராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்” அவர் என தெரிவித்தார்.

எனவே தற்போதைய இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் மன்னர் பட்டம் ஏற்கிறபோது, கமிலாவுக்கு ராணி பட்டம் வந்து சேரும்.

சார்லஸ் மன்னராகிறபோது, அவரது மனைவி கமிலா தானாகவே ராணியாக மாறுவது இயல்பான ஒன்றுதானே என்ற கருத்து எழும்.

சார்லஸ், கமிலா இருவருமே தங்கள் முந்தைய வாழ்க்கைத் துணைவர்களை விவாகரத்து செய்து மறுமணம் செய்தவர்கள் என்பதால் இதில் சந்தேகங்கள் எழுந்தன. பல்வேறு விதமான கருத்துகளும் கூறப்பட்டன.

சார்லஸ் மன்னரானாலும், கமிலா ‘கன்சார்ட் இளவரசி ’ என்றே அழைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது.

இப்போது 2 ஆம் எலிசபெத் மகாராணியே கமிலாவை ராணி என அழைக்கவே விருப்பம் என்று கூறி விட்டதால் இனி அவர் ராணி பட்டம் பெறுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது.