மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது.

லதா மங்கேஷ்கரின்  உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் உடல் அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக இன்று மாலை மும்பை செல்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்,  இராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து  தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள சிக்னல்கள், அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.