2020-ம் ஆண்டு பலருக்கும் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கலாம். குறிப்பாக சினிமா துறையில் பல மரணங்களை உள்வாங்கிய ஆண்டாக 2020 அமைந்தது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எதிர்பாராத பல உயிரிழப்புகளை சினிமா துறை சந்தித்தது. அப்படி 2020ம் ஆண்டில் காலம்சென்ற சினிமா பிரபலங்கள் யார்? யார்?

சட்விக் போஸ்மேன்: பெருங்கடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. ‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும், ஒட்டுமொத்த கருப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக். அவரது மரணம் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியது.

ஷான் கானரி: ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி அக்டோபர் மாதம் தனது 90-வது வயதில் காலமானார்.

இயக்குநர் கிம் கி டுக்: உலகப் புகழ்பெற்ற தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக், டிசம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 59. தெற்காசிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடமும் பிடித்த பிரபல இயக்குநர்களில் ஒருவர் கிம் கி டுக்.

ரிஷி கபூர்: மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மும்பை மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் காலமானார். அவருக்கு வயது 67.

இர்ஃபான் கான்: பிரபல இந்திய நடிகர் இர்ஃபான் கான் (54) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். நியூரோ எண்டாக்ரின் டியூமர் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துவந்த நிலையில் காலமானார். பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் இந்திய சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர் இவர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்: இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது சுஷாந்தின் மரணம். பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிரஞ்சீவி சார்ஜா: நடிகை மேக்னாவின் கணவரும், கன்னட சினிமா நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39.

சௌமித்திர சட்டர்ஜி: மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற நடிகர் சௌமித்திர சட்டர்ஜி, கடந்த நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

அனில் முரளி: கல்லீரல் பிரச்னை தொடர்பாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மலையாள நடிகர் அனில் முரளி, கடந்த ஜூலை மாதம் காலமானார். மலையாள நடிகர் என்றாலும் தமிழில் பரிச்சயமானவர் அனில் முரளி.

எஸ்.பி பாலசுப்ரமணியம்: 2020-ல் சினிமா உலகையும், ரசிகர்களையும் உலுக்கியது, பாடும் நிலா என்று அழைக்கப்படும் எஸ்பிபி-யின் மறைவு. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி செப்டம்பர் மாதம் காலமானார். திரையுலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இது.

விசு:சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த இயக்குநரும் நடிகருமான விசு கடந்த மார்ச் மாதம் காலமானார். அவருக்கு வயது 74.

சேதுராமன்: ''கண்ணா லட்டு திண்ண ஆசையா'' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மருத்துவர் சேதுராமன், கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் காலமானார்.

பரவை முனியம்மா: நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் மார்ச் காலமானார். அவருக்கு வயது 83.

வடிவேல் பாலாஜி: உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி (42) கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.

நடிகர் தவசி: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் காலமானார்.

சித்ரா: சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சித்ரா, டிசம்பர் 9ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயபிரகாஷ் ரெட்டி: தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வில்லனாகவும், காமெடியனாகவும் பல படங்களில் நடித்த ஜெயபிரகாஷ் ரெட்டி, செப்டம்பர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

அருண் அலெக்சாண்டர்: கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும், டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் (48) டிசம்பர் 29ம் திகதி மாரடைப்பால் காலமானார்.