கடந்த வார இறுதியில் கிறிஸ்ட்சர்ச் இல்லத்தில் ஜூலியானா ஹெர்ரேரா என்ற‌ பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தில் வசித்து வந்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த ஜூலியானா ஹெரேரா (37) என்பவரின் சடலம் கடந்த சனிக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  35 வயதான பண்ணை தொழிலாளி ஜனவரி 21 மற்றும் ஜனவரி 22 க்கு இடையில் ஹெரேராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அந்த நபர் கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆடியோவிஷுவல் இணைப்பு மூலம் ஆஜராகினார்.

இந்நிலையில் அவருக்கு பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள உயர் நீதிமன்றத்தில் அந்த நபர் மீண்டும் ஆஜர்படுத்தப்படும்போது, ​​பெயர் வெளியிடாமல் இருப்பதற்கான அனுமதி மறுமதிப்பீடு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.