வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாா்தா மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானாள். இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு அவளின் பெற்றோரை மிரட்டியதாக தெரிகிறது.

இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த பெற்றொர் வார்தா மாவட்டம் அர்வி தாலுகாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அந்த சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு சட்டவிரோதமாக கருவை கலைத்த டாக்டர் ரேகா கதம் என்பவரையும் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் சிசுக்களின் 11 மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் சட்டவிரோதமாக மேலும் பல கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து வார்தா மாவட்ட பொலிஸ் சூப்பிரண்ட் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்ட டாக்டரின் மாமனார், மாமியார் (இவர்களும் டாக்டர்கள்) கருக்கலைப்பு செய்ய உரிமம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிசுக்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக டாக்டர் ரேகா கதம் எந்த ஆவணத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை” என்றார்.