ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான லால்சாந்த் ராஜ்பூட்டிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுபர் லீக்கிற்காக இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றது.

இம்மாதம் 16ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகவுள்ள இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கும், 15 பேர் அடங்கிய ஜிம்பாப்வே ஒருநாள் அணி திங்கட்கிழமை (10) நள்ளிரவு இலங்கை வந்திருந்த நிலையிலையே, அந்த அணிக்குழாத்தில் காணப்பட்ட ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் லால்சாந்த் ராஜ்பூட் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிந்த விடயம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லால்சாந்த் ராஜ்பூட் தற்போது, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்கள் எவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது கொவிட்-19 வைரஸிற்கான சிகிச்சைகளை பெற்றுவரும் லான்சாந்த் ராஜ்பூட் அண்மையில் நிறைவுபெற்றிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகாலத்தில், கண்டி வொரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.