திருடனுக்கு கடிதம் எழுதி, பீரோவில் ஒட்டி வைத்து சென்ற வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்த 38 வயதான காட்வின் சாத்ராக் என்பவர் ஒரு வழக்கறிஞர்.

இவரது வீட்டில், 2018 அக்டோபரில் 55 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டன.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த சேலையூர் பொலிஸாருக்கு, திருட்டில் ஈடுபட்டவரின் கைரேகை மற்றும் அவரின் முகம் பதிவாகிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தன. ஆனால், திருடன் பிடிபடவில்லை.

இந்நிலையில், மீண்டும் 2019 நவம்பரில், இவரது வீட்டில் குடியிருந்த ஜான்பால் என்பவரது வீட்டில், பீரோவை உடைத்து, அரை சவரன் மோதிரம் திருடப்பட்டது.

இதிலும் திருடனின் முகம் பதிவாகிய கேமரா காட்சிகளும், கைரேகைகளும் கிடைத்தன. ஆனால் இன்று வரை இரண்டு சம்பவங்களிலும் திருட்டில் ஈடுபட்டவர் பிடிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த காட்வின் சாத்ராக், கடந்த 28ம் திகதி, சொந்த ஊரான கன்னியாகுமரி செல்லும் முன், வீட்டு பீரோவில், 'தம்பி பீரோவை உடைத்து விடாதே.' எப்படியும் உன்னை பொலிஸார் பிடிக்கப்போவதில்லை. சேதாரம் செய்துவிடாதே' என, திருடனுக்கு கடிதம் எழுதி, அதை பீரோவில் ஒட்டி சென்றார். இது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காட்வின் சாத்ராக் கூறுகையில், ''இரண்டு முறை திருட்டு நடந்த பின், 2020ம் ஆண்டு ஊருக்கு செல்லும் முன், சேலையூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பிற்காக கடிதம் கொடுத்தேன். ''அவர்கள், வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என, எழுதி கொடுக்குமாறு கூறினர். எனவே, இம்முறை பொலிஸை நம்பாமல் இந்த முடிவுக்கு வந்தேன்,'' என்றார்.