ரஷ்யாவில், தடை செய்யப்பட்ட பதிவை நீக்கத் தவறிய Google நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் அபராதமாக விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவில் சமூக ஊடக தளங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.

போதை பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள், போராட்டங்கள் ஆகியவை தொடர்பாக வெளியிடப்படும் பதிவுகளை நீக்காத சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ரஷ்ய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பதிவு ஒன்று கூகுளில் இடம் பெற்றிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பதிவை நீக்காமல் இருந்ததற்காக கூகுள் நிறுவனத்தை கடுமையாக சாடியதுடன் இதற்கு தண்டனையாக கூகுள் நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல முறை ரஷ்யா வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.

எனினும், நிறுவனம் ஒன்றின் வருடாந்திர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை அபராதமாக விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.