2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று காலை 9.30 முதல் மாலை 05 மணி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று மாலை 05 மணிக்கு வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நிதியமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சுக்கள், அதனோடு தொடர்புடைய இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் ஆகியவற்றின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் இன்று நடைபெறுகிறது.

விவாதங்களின் முடிவில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ பதிலளித்து உரையாற்றவுள்ளார். அதனையடுத்து வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு சபையில் நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 22 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றதுடன் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதனையடுத்து நவம்பர் 23ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. தொடர்ந்து இன்று டிசம்பர் 10ஆம் திகதி வரை விவாதம் நடைபெற்று இன்று மாலை 5 மணிக்கு அதன் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.