மியன்மாரில் இராணுவ வீரர்கள் கிராம மக்கள் 11 பேரை உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் அந்த நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அன்று முதல் இன்று வரை அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மியன்மாரில் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்து சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து கிராமத்தினர் 11 பேரை உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் மியன்மாரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

முன்னதாக கடந்த 5 ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.