எரிவாயு காஸ் சிலிண்டர் அனர்த்தம் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு சிரேஷ்ட மருத்துவர் தனது வீட்டில் வாங்கிய சிலிண்டரில் அவதானித்த வாயுக் கசிவை காணொளி மூலமாக அனுப்பியிருக்கிறார் (இணைக்கப்பட்டுள்ளது ).

இது ஏற்கெனவே பல சிலிண்டர்களில் அவதானிக்கப்பட்ட வாயுக் கசிவை உறுதி செய்கிறது. அதாவது எரிவாயு வெடிக்கும் நிலை ஏற்பட வேண்டுமாயின் வளியில் உள்ள ஒட்சிசனுக்கும் எரிவாயுவுக்கும் இடைத்தாக்கம் ஏற்பட வேண்டும்.

அவ்வாறான  நிலை இவ்வாறான வாயுக் கசிவு மூலம் ஏற்படும். விழிப்புணர்வுடன் புதிதாக வாங்கும் சிலிண்டர்களில் வாயுக் கசிவு இருக்கிறதா என்பதை பரிசோதித்து உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு  அனைவரிடமும் வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.

சிலிண்டரில் இருந்து மணம் எழுவது உடனடியாக பரிசோதிக்க வேண்டிய ஒரு நிலையாகும். இதைவிட இணைக்கப்பட்டுள்ள youtube காணொளி இணைப்பை  பார்வையிடுவதன் மூலம் எவ்வாறு சோப் நீர் கொண்டு வாய்க்கசிவை பரிசோதிக்க முடியும் என்பதை அனைவரும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும்  (.https://www.youtube.com/watch?v=AjcIKkIXEUw  ) .

குறிப்பாக நண்பர் அனுப்பிய காணொளியில் இருப்பது போல் புதிதாக வாங்கிய சிலிண்டரை இணைப்பதற்கு முதல் ஒரு  தடவை  வாயுக் கசிவுக்காக பரிசோதிப்பது உங்களுடைய உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும். 

மருத்துவர் ஏன் இந்த விடயங்களை பற்றி பேசுகிறார் என்று சிலர் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. அன்பர்களே! இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு சமமாக அல்லது அதிகமாக பௌதிகவியல் மற்றும் இரசாயனவியலில் உயர்தரத்தில் புள்ளிகளை பெற்று தான் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டோம் என்பதையும் மருத்துவர்களுக்கும் இது தொடர்பான  அடிப்படை விடயங்களை ஆராய முடியும் என்பதையும்  ஏற்றுக் கொள்ளுங்கள்.

அமைக்கப்பட்ட நிபுணர்குழு ஒரு போதும் தனது பக்கத்துக்கு goal போடப்போவதில்லை. எனவே பலரது உடமைகளுக்கும் உயிருக்கும் ஏற்கெனவே பல சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் மோசடியாளர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை செய்யப்படப் போவதுமில்லை.

மிஞ்சி மிஞ்சி போனால் சுன்னாகம் குடிநீர் மின்சாரக் கம்பனிக் கழிவுகளால் மாசடைந்தபோது அப்போதைய வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மக்கள் தமது கிணற்றுக்குள் தாமே ஒயிலை ஊற்றி விட்டு முறைப்பாடு செய்கிறார்கள் என்று கூறியது போல் இந்தப் பிரச்சினையிலும் காஸ் பாவனையாளர்களை குற்றம் சாட்டி மோசடியாளர்களை காப்பாற்ற முயற்சி செய்வார்கள். 

ஆக நாங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் எமது உயிரையாவது காப்பாற்ற முடியும்.