டிசம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்க இருந்த வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.

இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்களை இயக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

அந்த நாடுகளுக்கு மட்டும் தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையிலான சமீபத்திய ஆலோசனை கூட்டத்தில் அடுத்த மாதம் 15 முதல் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க முடிவு  செய்யப்பட்டது.

ஆனால்,  தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், ஜப்பான், இஸ்ரேல்  உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வழக்கமான வர்த்தக விமான போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்த  முடிவு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தற்போது ’ஏர் பபுள்’ முறையில் இயக்கப்படும் விமான சேவை  தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.