தந்தையின் மறைவுக்குப் பின், படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் எம்ஜிஆர். ஓரளவிற்கு அனுபவம் கிடைக்க, சில ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினார்.

1936ல் 'சதிலீலாவதி' என்ற படத்தில் துணை கதாப்பாத்திரமொன்றில் முதல்முறையாக நடித்தார். அதன் தொடர்ச்சியாகவே, நாயகனாகும் வாய்ப்புகள் எம்ஜிஆருக்கு கிடைக்கத் தொடங்கின. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான 'மந்திரிகுமாரி' திரைப்படம் நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள எம்ஜிஆருக்கு உதவியது.

இதன்படி மந்திரிகுமாரி திரைப்படத்திற்குப் பிறகு மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற திரைப்படங்கள் எம்ஜிஆருக்கு பெரும் வெற்றியாய் அமைந்தது. ஒருகட்டத்தில், நாயக பிம்பத்தை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்தார் எம்ஜிஆர்.

அநீதிக்கு எதிரான குணம், வள்ளல்தன்மை என சினிமாவில் அவர் நடித்த கதாப்பாத்திரங்கள்தான் இன்னும் அதிக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அதன் காரணமாக இன்றைய ரஜினி, கமல், விஜய் வரை எம்ஜிஆரின் அந்த பாணியை விடாமல் கடைபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு நடிகனாக நகைச்சுவை, சண்டை, காதல், நாயக பிம்பம் என எல்லாவற்றின் சரிவிகித கலவையாக பெரும் வெற்றிகளை தமிழ் சினிமா வரலாற்றில் கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா என எத்தனையோ படங்களை அதற்கு உதாரணம் சொல்ல முடியும்.

இதன்படி ,கலைஞனுக்கு தேடல் அவசியம் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தவர் எம்ஜிஆர். ஒரு நடிகனாக உச்சம் தொட்டபோதும், இயக்குநர், தயாரிப்பாளர், புகைப்பட கலைஞர் என வெவ்வேறு தளங்களில் அவரது தேடல்தான் உச்சத்திலேயே நிலைக்க உதவியது.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக மிளிர்ந்த எம்ஜிஆர், ரிக்‌ஷாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றிருக்கிறார். அத்தோடு, தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.