இலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று (23) முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

அதன்படி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இதன் பின்னர் நேற்று முன்தினம் வரையில் 4 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

 

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

 

குறித்த வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

 

இந்த நிலையிலேயே 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாத நடவடிக்கைகள், இன்று ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

 

மேலும் இறுதி நாளான 10ஆம் திகதியன்று மாலை, அதன் மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.