கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு ஆய்வு மாணவர் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டபோது சுற்றுமதில் சுவரின் வெளிபுறத்தில் கால்கள் மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷ்ணு சிற்பம் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பமாகும். இச் சிற்பம் நின்ற நிலையில் நான்கு கரங்களில் வலதுபுற இரு கரங்கள் உடைந்த நிலையில் உள்ளது.

மூக்கின் பகுதி சிறிது உடைந்த நிலையில், தலையில் மணிமுடி அணிந்தவாறு உள்ளது. காதுகள் இரண்டிலும் காதணியாக மகர குண்டலம், கழுத்தில் வனமாலை, வைஜெயந்தி என்கிற இருவகை மாலைகள் உள்ளன.

இடது கைகள் இரண்டில் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறு கம்பீரமான தோற்றத்தில் குறித்த சிலை காட்சியளிக்கின்றது.

 மார்பு பகுதி பூணூல் மற்றும் இடுப்பு நூல் அணியப்பெற்றுள்ளது.

இடுப்பு நூல் விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரின் சிற்பங்களில் காணக்கூடிய ஒன்றாகும்.