டில்லியின் பிரபலமான நட்சத்திர ஓட்டலில் உள்ள சலுானில் மாடல் அழகிக்கு தவறாக முடி வெட்டியதால், அவருக்கு இழப்பீடாக, 2 கோடி ரூபாய் வழங்கும்படி தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஓட்டலான ஐ.டி.சி., மவுரியாவில் சலுான் வசதியும் உள்ளது. இங்கு 2018ல் பிரபல மாடல் அழகி முடி வெட்டு வதற்காக சென்றார். இவர், நீளமான முடியை விளம்பரப்படுத்தும் ஷாம்பூ விளம்பர படங்களில் நடிப்பவர்.

இவர் முடி வெட்டச் சென்றபோது, அவருக்கு வழக்கமாக முடி திருத்தும் சிகை அலங்கார நிபுணர் இல்லாததால், வேறொருவர் முடி திருத்தினார்.

அப்போது மாடல் அழகி கூறியதை சரியாக கவனிக்காத சிகை அலங்கார நிபுணர், நீளமான முடியை குட்டையாக வெட்டி விட்டார். இதனால் மாடல் அழகி ஆத்திரம் அடைந்தார்.
அவரை சமாதானப்படுத்தும் விதமாக, சலுான் சார்பில் அவருக்கு இலவசமாக முடி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அந்த சிகிச்சையால் அவரின்
முடிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. தலையில் அவருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது. தோல் உரியத் தொடங்கி முடி கொட்டியது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாடல் அழகிக்கு விளம்பர படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தில் அவர் முறையிட்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தின் நீதிபதிகள் அகர்வால் மற்றும் காந்திகர் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட மாடல் அழகிக்கு, 2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க, ஐ.டி.சி., ஓட்டல் சலுானுக்கு உத்தரவு பிறப்பித்தது.