உலக சமாதான தினத்தை முன்னிட்டு கேரளா சகோதரிகள் 193 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி சாதனை படைத்துள்ளனர்.

கேரளா மாநிலம் சேர்தலா தாலுகா தைக்காட்டுசேரி பகுதியை சேர்ந்த சகோதரிகள் தெரேசா (21) , ஆக்னஸ் (18) .கடந்த 2008 ம் ஆண்டு முதல் இவர்கள் ஆஸ்திரேலியாவில் பிரின்ஸ் பேன் நகரில் வசித்து வருகின்றனர்.

உலக சமாதான தினத்தை (செப்..21)முன்னிட்டு பரின்ஸ் பேன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு 193 நாடுகளின் தேசிய கீதங்களை இசைத்து சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் உலக நாடுகளின் தேசிய கீதங்களை பாட தொடங்கிய போது ஆறு மற்றும் மூன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தோம். எங்களின் ஆர்வத்தை கண்ட எங்கள் தந்தை ஜாய் கே மேத்யூ ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதத்தின் சரியான வசனங்களை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளின் தூதரகங்களை தொடர்பு கொண்டதுடன், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஆசிரியர்களை அடையாளம் காண அவர் இன்டெர் நெட் மூலம் தேடி கண்டுபிடித்து உதவினார். இதற்காக பல மாதங்கள் கடுமையாக உழைத்தோம்.

இதனையடுத்து உலக சமாதான தினத்தை முன்னிட்டு சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் ஐ.நா., சங்க தலைவர் கிளாரி மூர், மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர் கிளைம் காம்ப்பெல் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு எங்கள் சாதனையை அங்கீகரித்தது.

இச்சாதனையை செய்து முடிக்க ஆறு மணி நேரம் ஆனது. மேலும் 20 நிமிடங்கள் மட்டுமே இடைவெளி வழங்கப்பட்டது என கூறினர்.

தெரேசா குயின்ஸ்லாந்தின் கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் உளவியலில் மூன்றாம் ஆண்டு மாணவியாக உள்ளார். ஆக்னஸ் காலம் வேல் சமூக கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டில், ஐ நா., சபையின் 75 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளில் கீதங்களை இசைக்க இச் சகோதரிகள்தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதத்தையும் பதிவேற்றம் செய்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தனர்.