அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் ரசிகர்களின் மனங்களை தன் வசம் ஈர்த்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டு மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

பின்னணி பாடகர், டிவி பிரபலம், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியவர் எஸ்பிபி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளிலும் காலத்தால் அழிக்க முடியாத,நெஞ்சை விட்டு அகலாத பல ஆயிரக் கணக்கான பாடல்களை பாடி தனது காந்த குரலால் பலகோடி மக்கள் மனதில் நின்று வசீகரித்தவர் எஸ்பிபி.

கேளடி கண்மணி படத்தில் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடலையும், அமர்க்களம் படத்தில் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலையும் மூச்சுவிடாமல் பாடி இந்த தலைமுறை ரசிகர்கள் வரை வியப்பில் ஆழ்த்தியவர் இவர்.

நான்கு மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய திரைப்பட விருதினை 6 முறை வென்ற எஸ்பிபி, தெலுங்கு சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.

ஏராளமான தமிழக மற்றும் கர்நாடக அரசு விருதுகளையும் பெற்ற இவர் இந்திய சினிமாவின் Personality of the Year என்ற சில்வர் பீக்காக் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்த புகழுக்கெல்லாம் அதிபதியான பாடும் நிலா எஸ்பிபி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி உலகை விட்டு பிரிந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து ஆண்டுவந்த அந்த காந்த குரல் நிரந்தர ஓய்வெடுக்க சென்ற துயரம் இன்றுவரை ரசிகர்கள் மனங்களில் ஆறாத வடு,மாறாத தடம் தான்.