மதுரை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் குழந்தைகளை சிலர் பிச்சை எடுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்கும் வகையில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,சமூக பணியாளர் அருள்குமார்,மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையில் 180இக்கும் மேற்பட்ட போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குழுவினர் பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், அண்ணாநகர், காளவாசல், மேலமடை, கே.கே.நகர் என 20 இடங்களில் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். இதுபோல் போக்குவரத்து சிக்னல்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணித்தனர்.

அப்போது, சாலையோரம் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டதுடன், அவர்களை பிச்சை எடுக்க வைத்தவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் சாலையில் ஆதரவின்றி சுற்றி வந்த 31 முதியவர்கள், பிச்சை எடுத்த 36 குழந்தைகள் (17 ஆண் குழந்தைகள், 19 பெண் குழந்தைகள்) ஆகியோர் மீட்கப்பட்டனர்.