நாடு தழுவிய ஊரடங்கில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் முகக்கவசம் அணியாத ஒரு Northland தம்பதியினர் போலீஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவர் உட்பட மேலும் ஊரடங்கு விதிகளை மீறிய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் இந்த தம்பதியினர் முகக்கவசம் இல்லாமல் காணப்பட்டதால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து Kaitaia வை சேர்ந்த குறித்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

அந்த நபர் தனது விவரங்களை வழங்க மறுத்துவிட்டார், அதே நேரத்தில் அந்த பெண் வாய்மொழியாக தவறாக பேசியதுடன் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளை உடல் ரீதியாக தடுத்தார்.பின்னர் அவர் ஒரு அதிகாரியை தாக்கியுள்ளார்.

இதன் விளைவாக, 31 வயதான குறித்த பெண் காவல்துறையினரை தாக்குவது, காவல்துறையை எதிர்ப்பது, காவல்துறையின் கொவிட் - 19 உத்தரவுக்கு இணங்கத் தவறியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 27 வயதான அந்த ஆண் காவல்துறைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உத்தரவுக்கு இணங்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்

இன்று பிற்பகல் போலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கோஸ்டர் ஒரு அறிக்கையில்,ஆகஸ்ட் 24 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, அலர்ட் லெவல் 4 தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் 50 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

"இந்த கைதுகள் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் வேண்டுமென்றே கட்டுப்பாடுகளை மீறியதனால் ஏற்பட்ட விளைவு என்று கோஸ்டர் கூறினார்.