தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரஜினிகாந்த் தன்னுடைய 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

 

அதன்படி ,1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் திகதி ராமோஜி ராவ் - ராமாபாய் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பள்ளிப்படிப்பை பெங்களூரில் படித்த அவர் சிறுவயதில் கிரிக்கெட், கால் பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தார். அதேபோல தன்னுடைய சகோதரரோடு சிறுவதிலேயே ராமகிருஷ்ணா மிஷன்னுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதன் மூலம் ஆன்மிகம் என்பது ரஜினிகாந்தோடு சிறுவயதிலேயே ஒட்டிக்கொண்டது.

 

அதன்படி கர்நாடக போக்குவரத்துத் துறையில் நடத்துநராக பணியாற்றிய சமயத்தில், அரசு துறைகளுக்கு இடையே நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியின் நடிப்பை பார்த்து அவருடைய நண்பரும் சக ஊழியருமான ராஜ் பகதூர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுமாறு யோசனை கொடுத்தார். இதை தொடர்ந்து சகோதரர் சத்தியநாராயணாவின் அனுமதியுடன் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் ரஜினிகாந்த்.

 

அபூர்வ ராகங்கள் மூலம் சினிமாவில் காலடி வைத்த ரஜினிகாந்த், முதலில் சிறிய கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்தார். பாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தால் தடம் பதித்தார்.

 

அதற்கமைய வசன உச்சரிப்பு, மேனரிசம் என தனி அடையாளத்துடன் வலம் வர தொடங்கிய ரஜினிகாந்த், பைரவி திரைப்படம் மூலமாக ஹீரோவானார்.எளிய நடிகராக சினிமாவில் அறிமுகமாகி முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற திரைப்படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் முத்திரை பதித்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து பில்லா, முரட்டுக்காளை ஆகிய படங்கள் மூலமாக, ஆக்ஷன் காட்டும் மாஸ் ஹீரோவாக, கோலிவுட்டின் அடுத்த அவதாரத்தை தொடந்தார்.

 

இதன்படி குணச்சித்திரம், ஆக்ஷன் என பயணித்த ரஜினிகாந்தின் முழுமையான நகைச்சுவை உணர்வை தில்லு முல்லு படம் மூலமாக வெளிக் கொண்டுவந்தார் கே. பாலசந்தர். இதன் பிறகு அவர் தொட்டதெல்லம் வெற்றி. எஜமான், தளபதி, அண்ணாமலை, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வசூல் மன்னனாக உருவெடுத்தார். அதிலும் எந்திரன், கபாலி, 2 பாயிண்ட் ஓ, பேட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன. இந்த நிலையில் தர்பார் படத்தை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி.

 

மேலும் ,45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என பெயர் எடுத்துள்ளார்.சினிமா துறையில் பல சாதனைகளை படைத்துள்ள ரஜினிகாந்த், விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார்.