பாடசாலை பாடங்களை, 'ஆன்லைனில்' படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு, 12 மாம்பழங்களை, 1.2 லட்ச ரூபாய்க்கு(இந்திய ரூபாய்) வாங்கி, மாணவிக்கு தொழிலதிபர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

இது எமது அண்டை நாடான இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜார்க்கண்டில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி, 11. ஆறாம் வகுப்பு மாணவி. இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, 'ஆன்லைன்' வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால் துள்சி குமாரியிடம், ஸ்மார்ட் போன் இல்லாததால், அவரால், ஆன்லைனில் படிக்க முடியவில்லை. பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க, குமாரிடம் வசதியில்லை.

 இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு வந்து, துள்சியை தேடி கண்டுபிடித்தார்.

துள்சியிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய்க்கு, 12 மாம்பழங்களை வாங்கினார். துள்சியின் தந்தையின் வங்கி கணக்குக்கு, 1.2 லட்ச ரூபாயை உடனடியாக, ஆன்லைன் வழியாக செலுத்தினார்.

 'இந்த பணத்தை வைத்து, ஸ்மார்ட் போன் வாங்கி, ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும்' என, துள்சியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும், துள்சிக்கு ஹீட்டே வழங்கினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.