பல்வேறு சர்ச்சைகளின் பின் தனக்கு வழங்கப்படவிருந்த விருதை திரும்ப அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். 

கேரள மாநில அரசின் மதிப்பிற்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி. விருது கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வைரமுத்துவின் மீது பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பாலியல் புகார்கள் அளித்து இவ் விருதினை வைரமுத்திற்கு வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கவே வைரமுத்துவிற்கு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்படுவதாக ஓ.என்.வி விருதுக்கான தேர்வுக்குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் ஓ.என்.வி இலக்கிய விருதை திரும்ப அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகிறது.

அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன்.

மேலும் எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

இந்நிலையில் இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி. என குறிப்பிடப்பட்டிருந்தது.