கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கலகலப்பான நடிப்பால் கவர்ந்திழுத்து, ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாள் இன்று. 

1943 மே மாதம் 26ஆம் திகதி மன்னார்குடியில் பிறந்த மனோரமா மேடை நாடகங்கள் வழியாக திரைப்படத்துறையில்  ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில்,நகைச்சுவை நடிகையாக கதாநாயகியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர்.

தில்லானா மோகனாம்பாள், காசேதான் கடவுளடா, கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களின் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார்.

நகைச்சுவை மட்டுமல்லாது,பாண்டவர் பூமி, சின்னத்தம்பி,அண்ணாமலை, மாயி,சின்னக்கவுன்டர்,நான் பெற்ற மகனே உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் மனோரமா.

நடிப்பையும் கடந்து சில படங்களில் மனோரமா பாடல்களும் பாடியிருக்கிறார். 

பொம்மலாட்டம் படத்தில் வரும் வா வாத்தியாரே, பாட்டி சொல்லை தட்டாதே படத்தில், தில்லிக்கு ராஜானாலும், மே மாதம் படத்தில் மெட்ராச சுத்தி பாக்க உள்ளிட்ட பாடல்களை பாடி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்ட மனோரமா, பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரார்.

தனது இயல்பான நடிப்பில் அத்தனை கோடி ரசிகர்களையும் சேர்த்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி இறைவனடி சேர்ந்த ஆச்சி மனோரமாவை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

ரசிகர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கும் வரை,மனோரமா வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.