கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள விருந்தகமொன்றின் உரிமையாளர் ஒருவர் மறைந்த அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் டியகோ மரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியமாக மாற்றியுள்ளார்.

 

கேரளாவின் புளூ நைல் விருந்தகம் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்,மறைந்த அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் டியகோ மரடோனா அங்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

 

மாரடோனா கேரளாவுக்கு செல்வதற்கு முன்பாக, அவரின் குழுவினர், கண்ணூர் சென்றடைந்து, அங்குள்ள விருந்தகங்களை ஆய்வு செய்தனர்.

 

 

இறுதியில் அவர்கள் புளூ நைல் விருந்தகத்தை தெரிவு செய்தனர். தங்களின் விருந்தகத்திற்கு வரப்போகும் விசேட விருந்தினர் மரடோனா என்பதை அறிந்த அதன் உரிமையாளர் வி.ரவீந்திரன், மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

 

ஏனெனில், அவர் கால்பந்து ரசிகர் மட்டுமன்றி, மரடோனாவின் தீவிர ரசிகரும் கூட. மாரடோனாவுக்கு 309 எண் கொண்ட அறை தேர்வுசெய்யப்பட்டது.

 

 

அங்கிருந்து மரடோனா சென்ற பின்னரும், அவர் பயன்படுத்திய தட்டுகள், கரண்டிகள், படுக்கை விரிப்புகள், குளியளறைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துவைத்து, அவற்றை அந்த அறைக்குள்ளேயே கண்ணாடி பெட்டகங்களுக்குள் பாதுகாத்து வைத்தார் ரவீந்திரன்.

 

அந்த அறையை, மரடோனா தங்கிய சிறப்பு அறை என்று அறிவித்து, வாடகைக்கும் விட்டுள்ளார்.

 

இதனையறிந்த மரடோனா ரசிகர்கள், மாதம் ஒன்றுக்கு சிலர் வீதம், அந்த விருந்தகத்திற்கு வருகை தந்து, அந்த அறையில் தங்கிச் செல்கின்றனர். அந்த அறை, மாரடோனா அருங்காட்சியமாக செயல்பட்டு வருகின்றது.

 

மாரடோனா இறந்ததையடுத்து, தனது விருந்தகத்தில், அவரின் புகைப்படத்தை வைத்து ரவீந்திரன் அஞ்சலி செலுத்தி வருகின்றார்.