Otago வில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஸ்மூத்திகள், சாலட் டிரஸ்ஸிங் அல்லது இனிப்பு வகைகளில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இந்த வைரஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒடாகோ பண்ணையில் 80,000 பறவைகள் அழிக்கப்படும் என்று முதன்மை தொழில்துறை அமைச்சகம் (MPI) உறுதிப்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் உள்ள மற்ற ஆறு பண்ணைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

பறவைக் காய்ச்சல் வைரஸ்கள், உணவுகளை சமைப்பதால் அழிக்கப்படும் என்று NZ உணவுப் பாதுகாப்பு துணை இயக்குநர் வின்ஸ் அர்பக்கிள் தெரிவித்தார்.

"பச்சை முட்டைகள் எப்போதுமே அதிக ஆபத்துள்ள உணவாகக் கருதப்படுகின்றன. முட்டைகளில் சால்மோனெல்லா உட்பட தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் இருக்கலாம் என்பதால், பச்சை முட்டைகளை உட்கொள்ளவோ ​​அல்லது பரிமாறவோ கூடாது என்பது எங்கள் ஆலோசனை என அவர் தெரிவித்தார்.

மேலும் எங்கள் வலுவான உணவு பாதுகாப்பு அமைப்பு ஆரோக்கியமான விலங்குகள் மற்றும் முட்டைகள் மட்டுமே உணவுச் சங்கிலியில் நுழைவதை உறுதிசெய்கிறது, எனவே எந்த பாதிக்கப்பட்ட பொருட்களும் உணவு விநியோகத்தில் நுழைவது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Otago பல்கலைக்கழக உணவு அறிவியல் பேராசிரியர் Phil Bremer,NZ உணவுப் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனையை ஆதரித்தார், பச்சை முட்டைகளில் உள்ள நோய்க்கிருமிகள் மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே சமைக்காத முட்டைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்