இந்தியா: தமிழ்நாடு

ஒரே மேடையில் விவாதிக்க என்னை அழைத்தால் நான் வருவேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கும் நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், "தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் முதன்மையான மாநிலமாக விளங்க வேண்டும். இந்த திட்டங்கள் உங்களுக்காக முதல்வரால் உருவாக்கப்பட்ட திட்டங்கள். 

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அவர்களுக்காக மட்டும் விளையாடவில்லை. அவர்களின் குடும்பத்துக்காக, அவர்களின் ஊருக்காக, மாநிலத்துக்காக விளையாடுகிறார்கள்" என பேசினார். 

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. என்னை அழைத்தால் நான் செல்வேன் என பதிலளித்தார். 

திருச்சி விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நான் முதலமைச்சராக இருந்த போது என்னென்ன திட்டங்களை நிறைவேற்றினேன் என பேச தயார். ஸ்டாலின் அவர்களே நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தீர்கள் என பேசுங்க. நீங்கள் போடுகின்ற மேடைக்கு வருகிறேன்" என சவால் விடுத்திருந்தார்.