பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் இலங்கை மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் திரைப்பட்ட வெளியிட்டு விழா ஒன்றில் நேற்றையதினம் (03) இளைஞர்களுடான கலந்துரையாடலில் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில்,“ நான் நாடாளுமன்றத்தில் இருந்தது போதும்.

தற்போது, நம்முடைய இந்த எரிவாயு சிலிண்டரில் இருந்து புதிய குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இன்று நாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்கள் மட்டுமே. அரசாங்கத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை.

இவர்கள் மூன்று நான்கு வருடங்களாக வேலை செய்கிறார்கள். யாரும் இல்லாத இரண்டு வருடங்களில் நாட்டை மீட்க எனக்கு உதவினார்கள்.

உலகிலேயே திவாலாகியதில் இருந்து வேகமாக மீண்ட ஒரே நாடு  இலங்கை, தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையில் சென்றால் எங்கு செல்லும் என்று தெரியாது.

அதனால்தான் அறிவும் அனுபவமும் உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பச் சொல்கிறேன்." என்றார்.