டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா, கடந்த 2012ம் ஆண்டு ஒய்வு பெற்றார். பல லட்ச இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக தொழில்துறை அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்தவர் ரத்தன் டாடா. 86 வயதான இவர் வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக திங்கட்கிழமை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், புதன்கிழமை உயிரிழந்தார்.

தொழில் உலகில் மட்டுமல்லாமல், சமூக சேவை துறையிலும் சிறந்தவராக விளக்கிய ரத்தன் டாடா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வந்தார். அவரது மறைவு இந்திய தொழில் உலகிற்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கே பேரிழப்பாகும். ரத்தன் டாடாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக ஜீ குழுமம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சிஇஓ புனித் கோயங்கா இதனை தெரிவித்து இருக்கிறார்.

இதற்காக, அவரின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற இருப்பதாகவும், அனுமதி கிடைத்த பிறகு, ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்படும் என அவர் கூறி இருக்கிறார். இளைஞர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றில், ரத்தன் டாடாவாக எந்த ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.