கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது உள்நாட்டு தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள்.

இந்நிலையில் தலிபான்கள் தொடர்ந்து அங்குள்ள ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாதுது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் கவிதைகள் படிக்கவும், பாடல்கள் பாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வெளியே பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது. உறவு முறையில் வராத ஆண்களும், பெண்களும் எந்த காரணம் கொண்டும் பார்த்து கொள்ளக்கூடாது, முஸ்லிம் அல்லாத பெண்கள் முன்பாகவும் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க வேண்டும்.

தளர்வான அதேவேளையில் நீண்ட உடையை அணிய வேண்டும். வழிபாடுக்கு ஏற்றது போல் போக்குவரத்து நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்பட யாருடனும் நட்பு பாராட்டவும், உதவி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.